தமிழின் தொன்மையைத் தேடி...
தேடலும் பேணலும்

தமிழரின் தொன்மை தொடர்பான தேடல்கள் காலம் காலமாக நடைபெற்று வந்தாலும், தமிழ் ஈழத்தின் இன அழிப்பின் பின், அதற்கான தேவை மேலோங்கி இருப்பது தொடர்ச்சியாக வெளிவரும் ஆய்வுகள் மூலமாக வெளிப்படுகிறது.
தமிழ் ஈழ நிழல் அரசைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிறுவிச் செயற்படுத்திய காலப்பகுதியில், இராணுவ அரசியற் செயற்பாடுகளுடன் தம்மைச் சுருக்கிக கொள்ளாது, பண்பாட்டுத் தேடலையும், மீட்டுருவாக்கத்தையும் தமது கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டு செயற்பட்டனர். அதற்காகத் தமிழீழத்தின் துறைசார் வல்லுநர்களையும், தமிழ்நாட்டின் துறைசார் வல்லுநர்களையும் அழைத்து, ஆய்வுக் கருத்தரங்குகளையும் பட்டறைகளையும் நிகழ்த்திப் புதிய இளைய சமூகத்திற்கு தமிழர் பண்பாடு, தமிழர் தொன்மை தொடர்பான அறிவூட்டலில் ஈடுபட்டனர். ஆயினும், 2009, வைகாசி 18 இன் இன அழிப்பின் பின்னர், இப்பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது.
இன அழிப்பிற்குப் பல்வேறு காரணிகள் ஏதுவாக இருந்தாலும், இப் பண்பாட்டு மீட்டுருவாக்கம் ஆட்சியாளர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. எனவேதான் அழிந்து போன அல்லது அழிக்கப்பட்டுக் கொண்பிருந்த தமிழர் பண்பாட்டை மீளவும் கட்டியெழுப்ப தமிழீழ விடுதலைப் புலிகள் கொடுத்த விலை 2009 வைகாசி 18 ஆக அமைந்தது. இதனடிப்படையிலேயே தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளும் தேடல்களும் இன்னமும் அவசியமாகின்றன.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தனது 'அடியும் முடியும்' என்ற நூலில் 'தமிழ் மொழி வரலாற்றாசிரியர்கள் தமிழ் மொழி உலகத்தைப் போன்றது, உலகத்தின் தோற்றத்தை அறியக்கூடுமாயினும் தமிழின் மூலத்தை முடிவாக அறியவியலாது, தமிழகமே மனுக்குலத்தின் தோற்றிடம் எனக் கூறினாலும் பகுத்தும் கணித்தும் ஊகித்தும் அறியும் ஆற்றலுடன் கூடிய ஆய்வு தேவை' என்கிறார். அதனை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, புது இலக்கியம், புதுக்கவிதை எனும் அறிவாராய்ச்சித் தேடலில் நாம் தமிழரின் தொன்மையைச் சில இடங்களில் தொலைத்து விட்டிருக்கிறோம் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
உலகம் மீண்டும் ஒவ்வொரு இனத்தின் வேர்களைத் தேடியும், அவ்வினத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறைகளைப் போற்றியும் பாதுகாக்க முனையும்போது, இனத்தின் விடுதலைக்கான தேடலில் ஈடுபடும் நாம், எம் தொன்மையைத் தேடுதலிலும் முனைப்புக் காட்ட வேண்டும். பண்பாட்டில், கலையில், இலக்கியத்தில் என எமது வேரினை அறிய முற்பட வேண்டும். பண்பாட்டின் தொன்மையினை ஆராயும்போது பண்டைய இலக்கியங்களைத் தவிர்த்து அவற்றைத் தேட முடியாது. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் என்பனவற்றூடாகவும், திணைகள், பெரியபுராணம், ஓவியங்கள் ஊடாகவும் எமது தொன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும்.
பணபாட்டின் வழி உற்று நோக்கும் பொழுது அது எதனைச் சுட்டி நிற்கிறது என அறிதல் சாலச் சிறந்தது. றேமன்ட் வில்லியம் தனதுCulture is ordinary எனும் நூலில் “ஒவ்வொரு மனித சமூகமும் தனக்கான தனித்த வடிவத்தையும் நோக்கத்தையும், உள்ளீடுகளையும் கொண்டுள்ளது. இதனை நிறுவனங்களினூடாகவும், கலை இலக்கியங்களினூடாகவும் வெளிப்படுத்துகின்றது” என்கிறார். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் தனது பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் எனும் நூலில், “மக்களுடன் பிணைந்து நிற்கும் பண்பாடானது பல்வேறு அடையாளங்கள் வாயிலாக வெளிப்பட்டு நிற்கும். இப்பண்பாட்டு அடையாளம் உடை, அணிகலன் போன்ற புழங்கு பொருளாகவோ, கல்வி-தத்துவம்-மருத்துவம் போன்ற அறிவுத்துறையாகவோ அமையலாம். இவற்றோடு மட்டுமன்றிப் பயன்படுத்தும் சொற்கள், சொற்களின் தொனி, முகபாவனைகள், சைகைகள் வாயிலாகவும் கூடப் பண்பாட்டு அடையாளம் வெளிப்படும்” என்கிறார். இக்கூற்றுப் புதிதல்ல என்றாலும் அதன் மூலத்தைப் பார்ப்போமாயின், இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டு அடையாளங்கள் எமது முன்னோரின் தொன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது.
தொல்காப்பியர் காலத்தில் சாதிகள் இல்லை. மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தால் பெயர் பெற்றனர். திணை நிலப் பெயரால் அழைக்கப்பட்டனர். குறிஞ்சித் திணையில் வாழும் மக்கள் குறவன், குறத்தி என்றும், பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் எயினர், எயிற்றியர் என்றும், மருத நில மக்கள் உழவர், உழத்தியர் என்றும், நெய்தல் நில மக்கள் நுளையர், நுளைச்சியர் என்றும், முலலை நில மக்கள் ஆயர், வேட்டுவர், ஆய்ச்சியர் என்றும் அழைக்கப்பட்டனர். அதே போன்று நிலத்தின் அடிப்படையில் தெய்வங்களை வணங்கினர். மத அடிப்படையில் அல்ல.
முல்லை நிலத்தார் மாயோனையும், குறிஞ்சி நிலத்தார் சேயோனையும், மருத நிலத்தார் வேந்தனையும், நெய்தல் நிலத்தார் வருணனையும், பாலை நிலத்தார் கொற்றவையையும் வணங்கினர் எனத் தொல்காப்பியத்தில் அறிகிறோம். எனவே தொல்காப்பியம் கூறும் தமிழர் பண்பாடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை அறிய முடிகிறது.
திருக்குறள் காட்டும் பண்பாட்டில் அறம் சார்ந்த கருத்துக்களே மேலோங்கி நிற்கின்றன. நடைமுறை வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களோடு, அற வழியில் ஈட்டிய பொருளும், அறவழியில் அனுபவிக்கும் இன்பமுமே அழியாமல் நிற்பன என்பதனை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூலம் வள்ளுவர் கூறி நிற்கின்றார். அத்துடன் குடும்பம், திருமணம், இல்வாழ்க்கை, விருந்து சுற்றத்தாரைப் போற்றல் போன்ற ஒழுக்க வாழ்வையும், கல்வி, அறிவு, அரசியல் சமூகப் பொருளாதார வாழ்வையும் திருக்குறள் கூறி நிற்கின்றது. குடும்பம் என்பது சமூகத்தில் மிகப் பெரும் அங்கம் என்பதால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் திருக்குறள் கூறுகின்றது.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு
- (1029)
கடவுள் வழிபாடு குறித்துத் திருக்குறள் முதன்மையாகப் பேசுகின்றது. ஒரு பண்பட்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்கவோ அல்லது பண்பட்ட தமிழ்ச் சமூகத்தை வெளிப்படுத்தவோ திருவள்ளுவர் முனைந்துள்ளார். அகமாயினும் புறமாயினும் சங்கப் பாடல்கள் பண்பாட்டின் எல்லைகளைத் தொடுகின்றன. அகப்பாடல்களில் களவையும் காதலையும், புறப்பாடல்களில் புரட்சியையும் புதுமையையும் புலப்படுத்தி நிற்கின்றன. சங்ககாலம் இயற்கையோடியைந்த தமிழரின் வாழ்வைத் தெளிவுறக் காட்ட நிற்கின்றது.
கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர்செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல் வாழியோ! வருந்துறும் யாமே -
(குறு : 69)
என்று சிறிய உயிர்களிடத்திலும் கூட அரிய பண்பாடுகளைக் கண்டு போற்றிய திறம், இயற்கையில் கண்ட பண்பாடுகளை மனிதருக்கும் ஏற்றிப் பாடி இயற்கையை முன்னிறுத்தி வாழ்ந்த வாழ்வை அறிகிறோம்.
தமிழ்ச் சமூகம் பண்பட்டு முன்னேறி வரும்போது அது தனக்கான வரையறையை வகுத்து முன்னேறியுள்ளது என்பதைச் சிலம்பு காட்டுகிறது. சிலப்பதிகாரக் காலம் மன்னர் ஆட்சிக் காலம் ஆயினும், அக்கால மன்னர்கள் மக்களாட்சித் தலைவர்களுக்குரிய பண்புகளுடன் ஆண்டுள்ளனர். மக்களும் மன்னரைப் பெரிதும் போற்றி வந்துள்ளனர். இந்திர விழாவின் முடிவில் கடலாடும் மக்கள் மன்னனுடைய 'வெண்கொற்றக்குடை இவ்வுலகம் முழுவதையும் உள்ளடக்கி ஆட்சி செய்வதாக' என மகிழ்ந்து போற்றுகின்றனர்.
மா இரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையான் எனவே
- (சிலப். கானல் 52)
இன்னும் பெரிய புராண மாந்தர் அறநெறியில் சிறந்தவர்கள், நாயன்மார்கள் அரசறிய, அடிபணிய வாழ்ந்த சான்றாண்மையாளர்கள். நாமார்க்கும் குபியல்லோம்நமனை அஞ்சோம்' என்ற பெருமிதம் உடையவர்கள். ஈகைத்திறம் போற்றி, எவ்வுயிர்க்கும் அன்பு செய்து, ஏற்றத் தாழ்வு கருதாது, தாய்மொழியைப் போற்றி வாழ்ந்தவர்கள் பெரியபுராண அடியவர்கள்.
எனவே தமிழரின் தொன்மையைத் தேடும் போது மேற்கண்ட இலக்கியங்கள் காட்டிய பண்பாடுகளைப் பேணித் தீயன களைந்து நல்லன போற்றித தொடர்ந்திட வேண்டும். தமிழரின் தொன்மையைத் தேடும் போது ஒரு திசையில் பயணித்தால் அவற்றைக் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால். வரலாற்று வழியாக, இலக்கியங்கள் வாயிலாக, பண்பாட்டின் வழியாக அவற்றைத் தேடும் போது அவற்றுக்கான பொதுத்தன்மையையும் உறுதிப்பாட்டையும் பெறக்கூடியதாக இருக்கும்.
மேலே நாம் குறிப்பிட்ட இலக்கியங்கள் வெவ்வேறு காலப்பகுதியில் வெளிவந்தவை ஆயினும் அவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது, தமிழ்ச் சமூகம் பண்பாட்டையும் நாகரிகத்தையும் வழிவழியாய்க் கொண்டுள்ளதைக் காண முடிகின்றது. இன்று நாம் புதுமை என்று சொல்லும் பலவும் தொன்மையில் கடைப்பிடிக்கப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. ஆயினும், தொடர்ச்சியான ஆய்வுகளும் தேடல்களும் அவற்றின் உறுதித்தன்மைக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே,
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் -
(504)
எனும் வள்ளுவரின் கூற்றுக்கேற்ப நல்லவற்றைத் தெரிந்து பேணிப்பாதுகாக்க வேண்டும்.
ஆக்கம் மேளின் இம்மானுவல்
ஆசிரியர், கனடாத் தமிழ்க்கல்லூரி







