தமிழர் தொன்மை
தேடலும் பேணலும்

தமிழர் ஒரு தனி இனத்தவர். தமிழர் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தவர். உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்து ஒழிந்தன. ஒரு சில மொழிகள் மட்டும் கால வெள்ளத்;தில் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அவ்வாறு நிலைத்துள்ள மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து இலக்கியமாகவே நிற்கின்றன. அவற்றின் இடத்தில் வேறு சில பல புதிய மொழிகள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி வளர்ந்து அழிந்த மொழிகளுக்கு இடையே மிகப் பழங்காலத்திலேயே தோன்றி செல்வாக்குடன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து வரும் மொழிகளில் தமிழ் முதன்மை அடைகின்றது. பழமைக்குப் பழமையாய் இலக்கிய வளம் உடையதாய் நிற்பதோடு புதுமைக்குப் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழியாகும். தமிழ் மொழியும் தமிழரும் பெருமைமிக்க மிகப் பழைய வரலாறு உடையவர்கள்.
தமிழினத்தின் தொன்மையும் சிறப்பும் தமிழ்ப் பழந்தமிழ் இலக்கியங்கள் என்று போற்றப்படும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணெண் கீழ்கணக்கு, திருக்குறள் இரட்டைக் காப்பியங்கள் ஆகிய நூல்களும் அயல் நாட்டிலிருந்து கடல் வழியாகவோ நில வழியாகவோ வந்து சென்ற பிறநாட்டவர் குறிப்புக்களும் தமிழின மரபின் தொன்மையையும் சிறப்பையும் நன்கு தெளிவாக்கியுள்ளன.
லெமூரியா என்று கூறப்படும் அந்த நிலப்பரப்பே குமரிக் கண்டம் என்று தமிழிலக்கியத்தால் அறியப்படும் பகுதியாகும். அங்கு குமரிமலை என்ற பெருமலை இருந்தது என்றும் பஃறுளியாறு என்ற ஆறு ஓடியது என்றும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் அறிவிக்கின்றன. இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் மக்கள் தோன்றினர் என்றும் அவர்கள் பேசிய மொழியே ஆதித்தமிழ் மொழி என்றும் ஆய்வாளர்கள் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, யாவா முதிலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரும் தீவு உருவாகியது.
சங்க இலக்கியங்களில் தமிழர் நிலப் பகுதிகளின் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. குமரிக்கண்டத்திற்குத் தெற்கே 49 நாடுகள் இருந்தாகவும் அவை ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குணகாண நாடு, ஏழ் குறும்பனை நாடு என்பவற்றைக் குறிக்கின்றன. தமிழர் வாழ்க்கை முறை செம்மைப்பட்ட திருந்திய ஒன்றாக அமைந்திருக்கின்றது. அரசியல் வாழ்வும், சமய வாழ்வும், இல்வாழ்க்கை முறையும் இவர்களிடத்தில் சிறந்த முறையில் அமைந்திருக்கின்றன.
'ஆதிசிவன் பெற்றான் - அகத்தியன் எனை வளர்த்தான்' என்று தமிழ்த்தாய் கூற்றாக் கூறும் பாரதியும் தமிழின் பிறப்பினை தென்னாட்டவன் சிவனுடன் தொடர்புபடுத்திக் கூறுவது தமிழ் மொழியின் தொன்மைத் தன்மையைக் குறிப்பதற்கேயாகும். தமிழர் என்ற இனத்தின் இன்றைய நிலையில் தனித்தே இலக்கியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ் மிகத் தொன்மையான மொழி என்று நிறுவிவிடல் இயலாததாகவுள்ளது.
இன்றளவில் நடைபெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் கீழடி, மணலூர். கொந்தகை, கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்படும் வாழ்விடங்கள், ஈமக்காடுகள், தொழிற்கூடங்களில் கண்டறியப்பட்டுள்ள க, ய என்ற தமிழி (தமிழ்) எழுத்துகள், செவ்வண்ணப் பூச்சுப் பெற்ற மட்பாண்ட ஓடுகள், மேலும் சூது பவளம், மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, எடைக் கற்கள், வெண்கலம் கலந்த செங்கல் கட்டுமானங்கள், நுண்கற்காலத்தைச் சேர்ந்த மெல் அலகுக் கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறு கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தங்க நாணயங்கள், சீன மட்பாண்டத்தின் விளிம்புப் பகுதிகளுடன் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மேற்கூரை ஓடுகள், கிண்ணங்கள், தூத்துக்குடி மாவட்ட சிவகளையில் காசுகள், கற்பந்துகள், சுடுமணல் ஓடுகள் மற்றும் கற்களால் ஆன ஆயுதங்கள் கிடைத்து உள்ளன. இவ்வாறான தொடர் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் தமிழர் வரலாற்றையும் 3 இலட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இத்தகைய ஆய்வுகள், கல்வெட்டுகள் பழம்பெரும் வரலாறுகள் தமிழரின் தொன்மையும் மொழியின் தோற்றமும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாகவே விளங்குகின்றன.
தமிழ் மொழி இலக்கியங்களாலும் ஆய்வுகளாலும் தொன்மையானதாகக் காணப்பட்டாலும் தமிழர் ஒரு நாட்டினராக இந்த நூற்றாண்டில் ஒரு நாட்டில் வாழாத காரணத்தினால், தமிழர் தமது மொழி, கலை, பண்பாடு, விழுமியங்கள் போன்றவற்றில் அகச்சூழலிலும் சரி புறச்சூழலிலும் தடுமாற்றத்துடன் நிலைமாறி வாழ்கின்ற தன்மையே தமிழின் தொன்மையை போற்றிப் பேணுதலில் பின்னடைவாக இருக்கின்றது.
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தனது கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். அவன் வாழ்ந்ததும் வாழப்போவதும் மொழியாலேதான். மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்றுவந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியே இன்றைய மொழியாகும்.
இன்றைய காலத்தில் இந்தப் பூமிப்பந்தில் பலநாடுகளில் வாழும் தமிழர் தாம் வாழும் நாடுகளில் பேசும் மொழியை மற்றொரு மொழியினத்தவருடன் தொடர்புகொள்ளும் போது, ஓர் மொழியிலுள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலத்தல் இயல்பாகும். மொழிக்கலப்பு என்பது மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சங்க காலத்திலிருந்தே தமிழுக்கும் வடமொழிக்கும் இருந்த தொடர்பை தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். சங்கமருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் வட மொழிச் செல்வாக்கு மிகுந்துவிட்டது. பின்னர் ஏற்பட்ட மாலிக்காபூர், பெர்சியன் படையெடுப்புக்குப்பின் உருது மொழியின் வாயிலாக அரபுச் சொற்கள் தமிழில் புகுந்துவிட்டன. இதன் பின் விஜயநகர நாயக்கர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கிய பொழுது தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. இதன் பின்னர் மேலைநாட்டாரின் வரவால் போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்கும் போது பல விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த வகையிலே தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. செந்தமிழ் என்பது செம்மைப்பட்ட அல்லது திருத்தமுற்ற தமிழாகும். இது தமிழின் பழமையான வடிவங்களை அழியாமல் பாதுகாத்து வருவது. கொடுந்தமிழ் என்பது பேச்சுத் தமிழாகும்.
சங்க இலக்கியங்களில் இடம்பெறும் செந்தமிழ் நடையின் தூய்மையை நோக்கும்போது அது இன்றைய மக்களுக்கு விளங்காத கடுமையை நோக்குகின்றது. இதனைத் தொல்காப்பியர் செந்தமிழ் நிலத்து எல்லையையோ கொடுந்தமிழ் நிலத்து எல்லையையோ குறிப்பிடவில்லை. செந்தமிழை இயற்சொல்லாகக் கொண்டு, வட்டார வழக்கினைத் திசைச்சொல் என்கின்றார். இந்த கொடுந்தமிழ் எனப்படும் பேச்சுத்தமிழ் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல், சமயம், வாணிகம், கலை, பண்பாட்டுத் தேவைக்காகப் பிறமொழி பேசும் இனத்தவருடன் தொடர்பு கொள்ளும்போது, பிற மொழிச் சொற்களை தாங்கள் அறியாதவாறே உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து பேச்சு வழக்கில் கையாளுகின்றார்கள். இதற்குக்காரணம் அரசியல் செல்வாக்குகளும், ஆட்சிமொழியாகவும், அரசுமொழியாகவும் மொழிகள் ஆதிக்கம் செலுத்தத் தவறுவதால் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழர் யார்? தமிழர் பண்பாடு எது? தமிழனின் அடையாளம் என்ன? போன்ற கேள்விகள் இன்று பலரால் எழுப்பப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வருவதால் இந்தக் கேள்விகள் மேலோங்கி நிற்கின்றன. பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடாகும். தமிழ்ப்பண்பாடு என்பது தமிழ் மக்களின் பண்பாட்டைக் குறிக்கும். ஆனால் தமிழ் மொழி பேசுபவர்கள் கூட பல்வேறு குழுக்களாகவும், மொழி வேறுபாடு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய வேறுபாடுகளை மறைக்கப்படுவதன் அரசியலைக் கண்டு பிடிப்பது அவசியமாகின்றது.
உரிமை உள்ளவன் தனியரசு என்பது உலக வரலாறு என்பர். நிலவியல் எல்லை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்று. நிலவியல் எல்லையும் பண்பாட்டு எல்லையும் ஒன்று அல்ல. பண்பாட்டு எல்லை என்பது குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றும் குழு பரவி வாழும் நிலவியல் பகுதியைக் குறிப்பதாகும். ஆனால் நிலவியல் எல்லை என்பது இயற்கை எல்லைகளால் அல்லது அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். இந்த நிலவியல் எல்லைகளைக் கொண்டு குழுக்களை வரையறை செய்ய முடியாது. ஏனெனில் குழுக்களின் பரவல் என்பது அரசியல் அதிகார நிலவியல் எல்லைகளுக்குள் உட்பட்டதன்று. அந்தவகையில் பண்பாட்டு நிலவியல் எல்லைகளின் தொன்மை நோக்கிப் பார்க்கின்ற போது தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளை தேடிப்பார்ப்போம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகையான நிலங்களைக் குறிப்பிடுகின்றன. இவ்வகையான நிலப்பகுதிகளும் ஒருவகையான பண்பாட்டு நிலைக் கூறுகள் ஆகும். ஏனெனில் ஒவ்வொரு நிலத்திற்குமுரிய முதல்பொருள் (நிலம், பொழுது), கருப்பொருள் (தெய்வம், உணவு, விலங்குகள், மரம் செடி, கொடிகள், பறவை, தோற்கருவிகள், தொழில், யாழ் போன்ற நரம்புக்கருவிகள்), உரிப்பொருள் (புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், இவற்றின் சூழலும்) ஆகியன வரையறுக்கப்பட்டவை. இதில் முதல், உரி, கருப்பொருட்கள் பண்பாடு சார்ந்தவை. இவ் ஐந்திணைகளும் மனித வளர்ச்சிகளைக் குறிப்பனவாகவும் பண்பாட்டு நிலைகளை எடுத்துக் கூறுவதாகவும் தமிழ் இலக்கிய மரபில் இலக்கண வகைமைகளாக அமைவதையும் காணலாம். இவை தமிழர் மரபு பற்றி விளக்கி நிற்பவை.
இந்தவகையில் தமிழர் அரசியல் சார்ந்த நிலங்கள் எல்லைகள் நிரந்தரமானதாக இருந்ததில்லை. பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள், மண்மீட்பு விடுதலை இயக்கங்கள் போன்றோரின் படைகள் அரசியல் சார்ந்த நிலவியல் எல்லைகளை மாற்றிக்கொண்டே இருந்தன. தொன்மைக்காலப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீண்;ட கால ஆட்சியில் இருந்தாலும் நிலப்பரப்புகள் நிரந்தரமானதாக இருந்தில்லை. பழந்தமிழகம் ஐந்து நாடுகளாக இருந்தாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். இவை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு போன்றனவாகும். இந்த நாடுகளின் நிலவியல் எல்லை என்பது இன்றைய தமிழகம், கேரளம், மற்றும் ஆந்திரா, கருநாடகத்தின் சிலபகுதிகள் ஆகும். இதன் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப்பின் மொழி அடிப்படையிலான மாநில நிலவியல் எல்லைப் பகுப்பு அமைக்கப்பட்டது. இந்த நிலவியல் எல்லைகள் தெளிவாகவும் துல்லியமாகவும் வரையறுப்பு செய்யப்படவில்லை. குறிப்பாக இருமொழி பேசும் குழுக்களை ஒரு எல்லைக்குள் எவ்வாறு அடக்குவது என்ற குழப்பம் நிலவியது. இவ்வாறன குமுகாயச் சூழலில் குழுக்களின் நிலவியல் எல்லைகளை வரையறுப்பது கடினம். இதன் விளைவாக இன்றைய தலைமுறை மொழி, இனம் என்று பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது.
தொன்மை என்பது வரலாறு. தேடல் என்பது உணர்வு. பேணல் என்பது கடமை. நான் யார்? நாம் யார்? என்ற தேடல் தனிமனிதனையோ அல்லது குமுகாயத்தையோ தன் வரலாற்றின்பால் தொன்மையைத் தேடிச்செல்ல வைக்கின்றது. இன்றைய குமுகாயச் சிந்தனை உலகில் இப்படியான பல வினாக்கள் எழுப்பப்படுகின்றன. வரலாறு என்பது கால ஓட்டத்தைக் குறிப்பது அல்ல. காலத்தின் கோலத்தைக் கணிப்பிட்டுக் கூறுவதுமில்லை. இறந்தகாலத்தைப் புதைகுழிக்குள் தேடுவதுமில்லை. கடந்து போன நிகழ்வுகளை காலவரிசையில் நிரைப்படுத்துவதுமில்லை. வரலாறு என்பது மனிதனின் வாழ்வு பற்றியது.
மனித வரலாற்றை மனிதர்கள் படைப்பதில்லை. இந்த வரலாற்றில் மனிதனின் தொடர் செயற்பாட்டின் மூலமே உறவுகளிலும் உலகத்திலும் மாற்றம் நிகழ்கின்றது. உலகில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இனங்களில் ஒவ்வொரு இனங்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கின்றது. இப்படியான தன்மை வாய்ந்த தமிழினமும் தமது தொன்மை வரலாறு அறிந்து எதிர்கால வரலாற்றை சரியான பாதையில் தமது அடையாளங்களை தெளிவான பாதையில் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லுதல் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக அமைகின்றது.
உலகில் நாடு இன்றி இருக்கும் இனங்களில் தமிழ் இனமும் ஒன்று. இவர்கள் அமைப்புகள் ஊடாக மனித செயப்பாடுகளை அரசியல், கருத்தியல், பொருண்மியம் ஊடாக எதிர்காலத்தின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது காலம் கையளித்த கடமையாக அமைகின்றது.
உலகில் தவறுதாலாகப் புரிந்து கொள்ளப்பட்ட வரலாறுகளில் தமிழர் வரலாறும் ஒன்றாகிவிட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி இன்று வரையிலும் உள்ள உலகில் வாழ்கின்ற தமிழர் வரலாற்றினை தக்க சான்றுகளுடன் தொகுத்துத் தொடர்புபடுத்திப் பார்ப்பது நன்று. தாய்த்தமிழ் மண்ணில் வாழ இயலாது கடல் கடந்து சென்று வாழும் மண்ணில் வாழுகின்ற தமிழினம் தமது ஆதிக்குடிகள் பற்றிய வரலாற்று பதிவுகளை கண்டறிந்து எதிர் கால தலைமுறைக்கு எடுத்துரைத்துச் செல்வது முக்கியமாகின்றது. தமது மக்களின் வரலாற்றை, உண்மைத் தன்மையை உறுதியோடும் கடமை உணர்வோடும் எடுத்துரைக்க வேண்டும்.
உலகத்தின் கவனம் தமிழினத்தின் போரட்டத்தின் பக்கம் திரும்பியிருக்கும் இந்த வேளையில் தமிழர் தங்கள் உரிமைகளையும் தொன்மை வரலாற்றுச் சான்றுகளையும், முற்றிலும் தவறுதலான புரிதலுடன் உள்ள ஏனைய நாட்டவருக்கும் எடுத்துரைக்கவேண்டும். பல தமிழருக்கே தமது வரலாற்றுப் பின்னணிகளைத் தெளிவு படுத்தவேண்டிய தன்மையும் உண்டு. தமிழர் தமிழார்வம் கொண்டு இனப்பற்றுடன் செயற்பட வேண்டிய கடமைப்பாடு உள்ளது.
குமரிக்கண்டம் தொடக்கம் தமிழீழம் வரை தமிழர் வரலாறு நீண்டு செல்கின்றது. இன்று தமிழன் உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து விரிந்து வாழ்கின்றான். தமிழனின் மண் பிற இனத்தவனின் கையில் இருப்பதுதான் இதற்குக் காரணமாக அமைகின்றது. தாய் நாட்டில் தன்மானத்துடன் வாழ வழியின்றி இருக்கும் சூழலில், பிற நாடுகளில் வாழ்கின்ற தமிழர் ஒவ்வொருவரும் தமக்கென்ற ஒரு தாய் நாட்டை உருவாக்க வீரத்துடனும் ஓர்மத்துடனும் போராடவேண்டும். புறநானூற்றில் தமிழரின் வீரத்தை நாம் அனைவரும் படித்ததுண்டு, ஆனால் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் அந்த தமிழரின் வீரம் நம் கண்முன்னால் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது இந்த நூற்றாண்டில்தான் என்பது வரலாற்று உண்மை.
'சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்தடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காப் போராடுவதைத்தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை' என்கின்ற தலைவனின் சிந்தனையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். வரலாறு கையளித்த கடமை என்பது வரலாற்றின் தொன்மையை அறிந்து உணர்வின் தேடல் ஊடாக எமது தமிழ் இனத்தின் அடையாளத்தை தக்க வைத்துத் தனியரசு உருவாக்கப்படவேண்டும். நாடு என்பது அனைத்துக்கும் அரண். அரண் இருப்பின் அனைத்தும் காக்கப்படும்.
இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் அடுத்தவன் காலுக்குச் செருப்பாய்!
ஆக்கம்: இராகவன் சண்முகநாதன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி






