நிலமும் பலமும்...
இராகவன் சண்முகநாதன்

'நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்! பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்'
தமிழீழத்துக் கவி புதுவையின் வரிகள் இந்தத் தலைப்பினை மேலும் பலமாக எழுதுவதற்குத் தொடங்கி வைக்கின்றது. தமிழர் வரலாற்றில் நிலம் கொண்டிருக்கையில் தமிழர் பலமாக வாழ்ந்தார்கள் என்பதனை தமிழ் இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன. தமிழ் இலக்கியங்களில் வரலாற்று அடிப்படையில் லெமுரியா என்று கூறப்படும் அந்த நிலப்பரப்பே குமரிக் கண்டம் என்று அறியப்பட்டது. அங்கு குமரிமலை என்ற பெருமலை இருந்தது என்றும் பஃறுளியாறு என்ற ஆறு ஓடியது என்றும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் அறிவிக்கின்றன. இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் மக்கள் தோன்றினர் என்றும் அவர்கள் பேசிய மொழியே ஆதித்தமிழ் மொழி என்றும் ஆய்வாளர்; பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தச் செய்தியினை சிலப்பதிகார அடிகளால் அறிகின்றோம்.
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி ! - சிலம்பு .11:18-22
குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, யாவா முதிலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு உருவாகியது. இவ்வாறு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர் தமது நிலப்பரப்புகளை ஐந்திணையாக வகுத்துள்ளனர். நிலம் என்பது வெறும் வாழும் இடமோ அல்லது ஆளும் இடமோ அல்ல. மனித வாழ்வியலில் தான் கொண்ட வரலாற்றினையும் வாழ்வியற் பண்பாடுகளையும் சுமந்து நிற்கும் பலம் கொண்ட பண்பாட்டுப் பெட்டகம்.
உரிமை உள்ளவன் தனியரசு என்பது உலக வரலாறு. நிலவியல் எல்லை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்று. நிலவியல் எல்லையும் பண்பாட்டு எல்லையும் ஒன்று அல்ல. பண்பாட்டு எல்லை என்பது குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றும் குழு பரவி வாழும் நிலவியல் பகுதியைக் குறிப்பதாகும். ஆனால் நிலவியல் எல்லை என்பது இயற்கை எல்லைகளால் அல்லது அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். இந்த நிலவியல் எல்லைகளைக் கொண்டு குழுக்களை வரையறை செய்ய முடியாது. ஏனெனில் குழுக்களில் பரவல் அரசியல் அதிகார நிலவியல் எல்லைகளுக்குள் உட்பட்டதன்று. அந்த வகையில் பண்பாட்டு நிலவியல் எல்லைகளைத் தொன்மை நோக்கிப் பார்க்கின்ற பொழுது தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளை தேடிப்பார்ப்போம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகையான நிலங்களைக் குறிப்பிடுகின்றன. மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி, காடும் காட்டைச் சார்ந்த இடம் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடம் மருதம், கடலும் கடலைச் சார்ந்த இடம் நெய்தல், வறண்ட நிலம் பாலை என்று நிலம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான நிலப்பகுதிகளும் ஒரு வகையான பண்பாட்டு நிலைக் கூறுகள் ஆகும். ஏனெனில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய முதற்பொருள் (நிலம், பொழுது), கருப்பொருள் (தெய்வம், உணவு, விலங்குகள், மரம் செடி, கொடிகள், பறவை, தோற்கருவிகள், தொழில், யாழ் போன்ற நரம்புக்கருவிகள்), உரிப்பொருள் (புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், இவற்றின் சூழலும்) ஆகியன வரையறுக்கப்பட்டவை. இதில் முதல், உரி, கருப்பொருட்கள் பண்பாடு சார்ந்தவை. இவ் ஐந்திணைகளும் மனித வளர்ச்சிகளைக் குறிப்பனவாகவும், பண்பாட்டு நிலைகளை எடுத்துக் கூறுவதாகவும் தமிழ் இலக்கிய மரபில் இலக்கண வகைமைகளாக அமைவதையும் காணலாம். இவை தமிழர் மரபு பற்றி விளக்கி நிற்பவை.
வன்பகை நடுங்க வேலெடுத்து பாய்ந்து தாய் நிலம் காத்த முப்பாட்டன் முருகன் தமிழரருக்குத் தெய்வம் ஆனான். ஓடும்
நீரினை தேக்கி நிலத்தில் வேளாண்மை கண்டு விளைச்சல் செய்ய முடியும் எனக் காட்டினான் பாட்டன் கரிகால் பெருவளத்தான். அழகு நிறை சிற்பங்களைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வான்புகழ் கொண்டு தஞ்சைப் பெருவுடையார் கொண்டான் அருண்மொழிச் சோழன். இவையெல்லாம் தமிழன் நிலம் கொண்டு பலம் கொண்டு வாழ்ந்தமையினால் பொற்காலமாக தமிழர் வரலாறு அமைந்தது.
இந்த வகையில் காலப்போக்கில் தமிழர் அரசியல் சார்ந்த நிலங்கள் எல்லைகள் நிரந்தரமானதாக இருந்ததில்லை. பேரரசர், சிற்றரசர், குறுநில மன்னர், மண்மீட்பு விடுதலை இயக்கங்கள் போன்றோரின் படைகள், அரசியல் சார்ந்த நிலவியல் எல்லைகளை மாற்றிக்கொண்டே இருந்தன. தொன்மைக்கால பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீண்;ட கால ஆட்சியில் இருந்தாலும் நிலப்பரப்புகள் நிரந்தரமானதாக இருந்தில்லை. பழந்தமிழகம் ஐந்து நாடுகளாக இருந்தாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். அவை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்பனவாகும். இந்த நாடுகளின் நிலவியல் எல்லை என்பது இன்றைய தமிழகம், கேரளம், மற்றும் ஆந்திரா, கர்நாடகத்தின் சிலபகுதிகள் ஆகும்.
இதன் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின் மொழி அடிப்படையிலான மாநில நிலவியல் எல்லைப் பகுப்பு அமைக்கப்பட்டது. இவை தெளிவாகவும் துல்லியமாகவும் நிலவியல் எல்லைகள் வரையறை செய்யப்படவில்லை. குறிப்பாக, இரு மொழி பேசும் குழுக்களை ஒரு எல்லைக்குள் எவ்வாறு அடக்குவது என்ற குழப்பம் நிலவியது. இவ்வாறான குமுகாயச் சூழலில், குழுக்களின் நிலவியல் எல்லைகளை வரையறுப்பது கடினம். இதன் விளைவாக அரசியல் நிலவியல் பண்பாட்டு மாற்றங்களை இன்றைய தலைமுறை மொழி, இனம் என்று பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றது. இடையிடையே ஏற்பட்ட அரசு மாற்றம், ஆட்சி மாற்றம், நிலமாற்றம் முதலியன தமிழர் பலத்தைப் பாதித்தது. மேலும் நாம் அண்மைக் காலங்களாக தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நடைபெறும் வரலாற்றுச் சான்றுகளை கண்முன்னே பார்க்கின்றோம்.
ஈழத்திலும் தமிழர் நிலப்பகுதிகள் குடியேற்றங்கள், இனப்படுகொலைகள் ஊடாகப் பறிக்கப்படுகின்றன. தன்மானத்தோடு, தன்னுரிமையோடு வாழ, தமிழருக்கென தனிநாடு ஈழம் வேண்டி நடந்த போர் இன்று மௌனிக்கப்பட்டுள்ளது. சொந்த மண் விடுதலைக்காகப் பல விடுதலை வீரர்கள் தமது உயிர்களை ஈகம் செய்தனர். பலம் கொண்டு வாழ்ந்த தமிழரை இலங்கையில் இருந்து போர், பொருண்மியம் முதலியன புலம் பெயர வைத்தன. நாட்டில் நிலமிழந்த காரணத்தினால்தான் அவர்கள் பலமங்கு பறிபோனது. நிலம் காக்கும் வீரர்கள் படை எம்மண்ணில் இருந்தபோது, புலத்தில் வாழும் தமிழர் தங்கள் பலத்தால் சொந்தநாட்டின் தேவைகளை பலமாக்கிக் கொண்டனர் என்பதை ஈழத்து வரலாறு காட்டி நிற்கின்றது. இன்றளவும் புலத்தில் உள்ளோர் தங்கள் நிலத்தின்மீது கொண்டுள்ள பற்றினால், தங்கள் சொந்தங்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக பலவகையில் பலம் சேர்க்கும் பங்காற்றல்களைச் செய்து வருகின்றனர்.
குமரிக்கண்டம் தொடக்கம் தமிழீழம் வரை தமிழர் வரலாறு நீண்டு செல்கின்றது. இன்று தமிழன் உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து விரிந்து வாழ்கின்றான். தமிழனின் மண் பிற இனத்தவனின் கையில் இருப்பதுதான் இதற்குக் காரணமாக அமைகின்றது. சொந்த நாட்டில் மட்டுமின்றித் தாய் நாட்டிலும் தன்மானத்துடன் வாழவழியின்றிப் பிற மாநிலங்களில், நாடுகளில் வாழ்கின்ற தமிழர் ஒவ்வொருவரும் தமக்கென்ற ஒரு தாய் நாட்டை உருவாக்க வீரத்துடனும் போராடவேண்டும்.
புறநானூற்றில் தமிழரின் வீரத்தை நாம் அனைவரும் படித்ததுண்டு, ஆனால் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் அந்த தமிழரின் வீரம் நம் கண்முன்னால் உலகம் முழுவதும் பறை சாற்றப்பட்டது இந்த நூற்றாண்டில்தான் என்பது வரலாற்று உண்மை.
'சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்தடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை' என்கின்ற தலைவனின் சிந்தனையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
வரலாறு கையளித்த கடமை என்பது வரலாற்றின் தொன்மையை அறிந்து எமது தமிழ் இனத்தின் அடையாளத்தை பலத்தினூடாக தக்க வைத்து தனியரசு உருவாக்கப்படவேண்டும். நாடு என்பது அனைத்துக்கும் அரண். அரண் இருப்பின் அனைத்தும் காக்கப்படும். மீண்டும் புதுவையின் கவிதையுடன் இதனை நிறைவு செய்து கொள்ளாலாம்.
'இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்'
துயரம் அழுவதற்காக அல்ல....எழுவதற்காக....
' அட மானுடனே !
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம் .
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே .
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே .
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழந்து போகும்
ஆதலால் மானுடனே !
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் '
ஆக்கம்: இராகவன் சண்முகநாதன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி






