சங்கத் தமிழர் வாழ்வும் வளமும்
சுலோசனா லோகன்
“பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து
சங்கத்து இருப்பிலே இ p ருந்து வைகையேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்து
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரும்
செம் மொழியாம் தமிழ் மொழியைப்
பேசும் பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்”
தொன்மைக் காலத்தில் நாகரிக விளக்கேற்றி நானிலம் முழுவதும் அகவொளி பரப்பியவன் தமிழனே. மிகப்பழமை வாய்ந்த இனம் தமிழினமே. முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் சீரிளமைத் திறனும் குன்றாமல் இயன்றளவும் நின்று புதுமைப் பொலிவோடு திகழ்வது தமிழ் மொழியே. இத்தகைய தமிழ் பேசும் தமிழரின் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார். தனித்தமிழிற்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர், செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள்.
தமிழும் தமிழ்மொழிசார் இலக்கியங்களும் பழமை மிக்கவை மட்டுமன்றி உலகெங்கும் வாழும் பல்லின மக்களுக்கும் அறிவூட்டக்கூடிய கருவூலங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக திருக்குறள், நாலடியார் எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற பல இலக்கியங்கள் அன்றிலிருந்து இன்றுவரை மக்களின் உள்ளங்களை வளம்படுத்தக் கூடியனவாக அமைந்துள்ளன.
மூவேந்தர் ஆட்சி, அன்பின் ஐந்திணை ஒழுக்கம், போரியல் ஒழுக்கம் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை, உணவு முறை, தொழில், கொடைத்தன்மை என்பன யாவும் வளமானதாகவும் இயற்கையோடு ஒட்டியதாக இருந்ததுவும் மிகவும் சிறப்பான விடயம். இன்று மனிதர்களிடம் அதுவும் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமை, தன்மானம், வீரம், அன்பு, மனிதாபிமானம், மானிட உறவு எனப் பல்வேறு வாழ்வியல் அம்சங்கள் சங்கத் தமிழரிடை நிலை பெற்றிருந்தது.
சங்ககால சமுதாய அமைப்பானது இயற்கைக்கேற்ப குழுமுறை அமைப்புகளையும் அவற்றிற்கிடையிலான போட்டிகளையும், போர்களையும் நிறைவாகக் கொண்டிருந்தது. அச்சமுதாயக் குழுக்களின் தலைவர்களே மன்னர்களாக இருந்தனர். அவர்கள் ஒருபொழுதும் அறநெறி தவறிய வழியில் சென்றதில்லை. எப்பொழுதும் குடிமக்களுக்கு ஏற்பவே ஆட்சி செய்தனர். இச் செயற்பாடு முடியாட்சியிலும் மக்களின் தனிமனித உரிமை பேணப்பட்ட தன்மையை வெளிப்படுத்தியது. அதனால் மக்கள், மிக அவசியமான உணவு, நீரை விட மன்னனையே உயிராகப் போற்றினர் என்பதற்கு
‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்’
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. மனிதவாழ்வு என்பது இயற்கையுடன் இணைந்திருக்கும் வரை மனிதனுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்பட மாட்டாது என்பதனைச் சங்கத்தமிழர் வாழ்வு உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று அதை மறந்து இயற்கையை அழித்து மனிதன் வாழத் தலைப்பட்டதன் விளைவு விபரீதமான ஆபத்துமிக்க நோய்கள், இயற்கை அனர்த்தங்கள், உலகத்தையே அச்சுறுத்தி நிற்கும் கொடிய கொரோனா நோய்கள் அதாவது இலட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்துத் தொடர்ந்தும் மக்களையே சுற்றிக் கொண்டிருக்கும் கொடிய நோயால் மனித சந்ததியே அழிந்து கொண்டிருக்கின்றது.
எனவே பழைய கால வாழ்க்கை முறை அக்காலத்து மன்னர்களின் பெருநீதி, குறிப்பாக மனுநீதி கண்ட சோழன் பசுக்கன்றிற்காகத் தன் மகனைக் கொல்ல நினைத்ததுவும், முல்லைக் கொடிக்காகப் பாரி தேரை நிறுத்தியதும், பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்ததும் நாம் என்றும் நினைவில் வைக்க வேண்டியன ஆகும். இவை யாவும் தமிழருக்குரிய சிறப்பம்சம் என்பதை எவரும் மறக்க முடியாது.
மேலும் சங்ககால மக்கள் இயற்கையோடு இணைந்து மகிழ்வாக வாழ்ந்த வரலாற்றை ஒருமுறை மீட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியது பெருமைக்குரிய தமிழர்கள் அனைவருக்கும் மிகமிக அவசியம். இயற்கையோடு இணைந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நில அமைப்பிற்கேற்ப அவனது காதல் வாழ்வு, விருந்தோம்பல் அறஉணர்வு போரியல் நடைமுறை, தொழில், உணவுப் பழக்கவழக்கங்கள் என்பன அமைந்திருந்தமை எடுத்துக் காட்டாகின்றது.
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தோர் குறவர்கள், முல்லை நிலத்தில் வாழ்ந்தோர் ஆயர்கள், மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவர்கள், நெய்தல் நிலத்தில் வாழ்ந்தோர் பரதவர்கள், பாலை நிலத்தில் வாழ்ந்தோர் மறவர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டையாடுதல், தினைவிதைத்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களைக் குறிஞ்சி நிலத்தோர் மேற்கொள்ள, முல்லை நிலத்தோர் காடுகளில் வாழ்ந்தபோதும் காடுகளை அழித்துப் பயிர் செய்யாது அவற்றோடு இயைந்து வாழ்ந்து மந்தை மேய்த்தலை முதன்மைத் தொழிலாகச் செய்து இயற்கை நாட்டம் பேணினர். வளம் நிறைந்த மருத நிலத்தோர் உழவுத் தொழிலைச் செய்தனர். இவர்களுக்கு ஓய்வுநேரம் அதிகம் கிடைத்தமையால் கலைகளில் ஈடுபட்டதுடன் சிந்திக்கவும் தொடங்கினர். நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் சங்கு எடுத்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்ற பொருளாதார வளம்மிக்க தொழில்களைச் செய்தனர்.
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளுமே’
என்ற சிலப்பதிகார வரிகள் முல்லை நிலத்திற்கும் குறிஞ்சி நிலத்திற்குமிடையில் பாலை நிலம் அமைந்ததாகவும் இருநிலத்தோரும் தமது நிலங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை மற்ற நிலத்தில் பண்டமாற்றுச் செய்யச் செல்லும் போது பாலை நிலைத்தினூடாகச் சென்றனர். இயல்பாகவே வளமற்ற பாலை நில மக்கள் அவர்களிடமிருந்து அப்பொருட்களைச் சூறையாடி தமது வாழ்வை நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. தொடக்க காலத்தில் பாலை நில மக்களைத் தவிர நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்களும் தமது தொழில் மூலம் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்துள்ளனர்.
இல்லற வாழ்வு என்பது காதலுடன் மலர்ந்துள்ளது. தமிழர் வாழ்வில் கணவன் மனைவியரிடையே காணப்பட்ட அன்பின் நெருக்கத்தையும் உறவின் வலியையும் ஐவகை நிலங்களுக்குமுரிய அக ஒழுக்கங்களான குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும் நெய்தலுக்கு இரங்கலும் பாலைக்குப் பிரிதலும் சிறப்பான உரிய ஒழுக்கங்களாக உள்ளன. இவற்றை ‘அன்பின் ஐந்திணை’ என்று சிறப்பித்துக் கூறப்படுவது தமிழருக்குரிய சிறப்பான அம்சமாகும். மேலும் காதலின் வலிமையைக் கைக்கிளை, பெருந்திணை என்பனவும் உணர்த்துகின்றன. தம் காதல் நிறைவேறாத போது மடலேறுதல், வரைபாய்தல் மூலம் தம்முயிரை மாய்த்தமை, ஆடவரின் அற்புதக் காதல் உணர்வை எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் குறிஞ்சி நிலத்தில் களவொழுக்கம் மேலோங்கிக் காணப்பட்டதுடன் பரத்தையர் ஒழுக்கமும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்வில் போரும் வீரமும் எவ்வளவு பெரிதாகப் போற்றப்பட்டன என்பதற்கு
'களிநெறிந்து பட்டனளென்னு உவகை ஈன்ற ஞான்றிலும் பெரிதே'
என்ற புறநானூற்று அடிகள் சான்று பகர்கின்றன. அதாவது தன் மகன் போரில் வீரத்தடன் இறந்த செய்தி கேட்டு தான் பெற்ற பொழுதைவிட மகிழ்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளமை சங்கத்தமிழரின் வீரத்தை எடுத்துக்காட்டுகிறது.
சங்ககால மக்கள் ஐவகை நிலங்களுக்கும் தனித்தனிக் கடவுளரை வழிபட்டனர். குறிஞ்சி - சேயோன், முல்லை - திருமால், நெய்தல் - வர்ணன், மருதம் - இந்திரன், பாலை - கொற்றவை என்றவாறு வழிபாடுகள் காணப்பட்டன. இது அவர்களிடையே மத முரண்பாடுகளின்றி வாழ்வு மகிழ்வுறக் காரணமானது எனலாம். இன்று பல்வேறு பதவிகளும் மக்கள் வாழ்வை நெறிப்படுத்துவதற்குப் பதிலாக முரண்பாடுகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் நிலையில் சங்கத் தமிழர் சமய வாழ்வு, சுகவாழ்வு மிக்கதாக உள்ளமை போற்றுதற்குரியதாகும்.
சங்ககாலக் குறுநில மன்னர்களான பாரி, பேகன் அதியமான் போன்றோர் முறையே கபிலர், பரணர், ஒளவையார் போன்ற புலவர்களை ஆதரித்தனர். மேலும் மருத நிலத் தலைவன் பாணர், கூத்தர் போன்றோரை ஆதரித்தான் என்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. இது சங்கத் தமிழர்கள் இரக்கம் கொண்டு ஏழைகளுக்குக் கொடை வழங்கி அறம் செய்து காத்தனர் என்ற விடயத்தை வெளிப்படையாக உணர்த்துகின்றது.
‘எத்துணையாயினும்ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர் வறுமை நோக்கின் நவன்கை வண்ணம் '
எனப் பரணர் பேகனின் கொடைச் சிறப்பைப் போற்றியுள்ளார்.
இது மட்டுமா சங்ககாலத்தமிழர் அமைதி, ஒற்றுமை என்பவற்றிலும் உயர்ந்து விளங்கினர்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் உலகிற்கே சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் முதன்முதலில் எடுத்துக்கூறிய பெருமைக்குரியது. இவ்வாறாகச் சங்கத் தமிழர் வாழ்வும் வளமும் தனித்துவமான அடையாளங்களுடனும் சிறப்பம்சங்களுடனும் இன்றும் இவர்கள் வாழ்வை எண்ணி இன்புறும் அளவிற்கு இலக்கியங்கள் இனிதே எடுத்தியம்புகின்றன. எனவே தான் 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு கலையுண்டு, அமிழ்தம் அவனுடைய மொழியாகும் அன்பே அவனது வழியாகும்' என்ற பெருமிதத்துடன் தமிழரின் பெருமையை உலகறியச் செய்வோமாக.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இருத்தி
என் வாயுற வாழ்த்தேனோ ! – பாரதியார்
ஆக்கம்: ஆசிரியர் சுலோசனா லோகன்







