தமிழிசையின் தொன்மை
புரிதலும் பேணலும்.

தமிழிசைத் தொன்மை: புரிதலும் பேணலும்.
தமிழ் மக்களின் வாழ்வோடு இசை இரண்டறக் கலந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்ற முப்பிரிவுகளையும் கொண்டமைவதனால் முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்றது. முதற் சங்கப் புலவராகக் கருதப்படும் அகத்தியரால் இயல், இசை, கூத்து என மூன்றாகப் பகுக்கப் பெற்ற இந்த முத்தமிழ்ப் பிரிவானது தமிழின் தொன்மையையும் இசையின் தொன்மையையும் அடையாளமிட்டு நிற்கின்றது.
பண்பட்ட இனங்கள் அனைத்தும் தமக்கெனத் தனித்தனி இசை மரபுகளைக் கொண்டிருப்பது வழமையாகும். இதே போன்று நாடோடியினங்களும் வனவாசிகளும் கூடத் தமக்கென ஓர் இசை மரபினைக் கொண்டிருப்பார்கள். தமிழிசையானது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாகும்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழினத்தின் இசை மரபானது, தமிழ்ப் பண்பாட்டோடும் இரண்டறக் கலந்திருந்தது. அனைத்து உயிர்களையும் தன்வயப்படுத்தி இசைய வைப்பது இசையாகும்.
இங்கு, நாம் தமிழிசைத் தொன்மை என்பதை எடுத்து நோக்கினால், தமிழ் மக்களின் வாழ்வோடு இசை இணைந்திருந்தமையைப் பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டும், நாட்டார் இலக்கியங்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், அருள்நெறிப் பாடல்கள் போன்ற இலக்கண இலக்கியங்கள் மூலமும் அறிந்து கொள்ள முடிகின்றது.
தமிழிசை வரலாறானது, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாகும். இசையைப் பண் என்று கூறுவதும் வழக்கமாகும். ஒலித் தொகுதியாகிய இசைக் கலைக்கு முதலிடம் கொடுத்து அதனைப் பற்றி நிற்கின்ற மொழி தமிழ்மொழி. ஆதலால் தமிழ்மொழி இசைத்தமிழ் என்றும். தமிழே முதன்மையாக நின்று இதனைப் பற்றி நிற்கும் இசையைத் தமிழிசை என்றும் கூறுவது தமிழ் வழக்காகும். இசை ஏழின் முதலமைப்பை முறையே தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி என்பது பண்டைய வழக்காகும். இந்த இசை ஒலிகளைக் குறிப்பதற்கு, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு உயிர் நெடில் எழுத்துகளைப் பயன்படுத்தினர். இவை இன்று, ச, ரி, க, ம, ப, த, நி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏழிசைகளின் அடியாக நூற்றியெட்டுப் பண்கள் தோன்றின.
பழந்தமிழர் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி ஆகியவற்றைக் கொண்டு இசைக் கலையை வளர்த்தனர். இசையமைப்பதற்குரிய இலக்கணங்களை வகுத்தனர். இசை ஆய்வுக்கு ஏழிசைச் சங்கம் அமைத்து ஆய்வு செய்தனர். அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றசை, இசைமரபு, இணை நுணுக்கம் போன்ற இசை நாடக நூல்கள் எழுந்தன. இசைக்கு அடிப்படையான சுரங்களையும் சுருதிகளையும் பண் உண்டாக்கும் முறைகளையும் நுணுக்கமாக உருவாக்கிக் கடைப்பிடித்தும் வந்தார்கள். இவ்வாறு அவர்கள் பாடி வந்த இசைகள் 12, 000 என்று கூறப்படுகின்றது.
தமிழிசைக் கருவிகளுள் மிகவும் பழமையானது யாழ் ஆகும். யாழ் என்னும் நரம்பிசைக் கருவி, 'பண் முறைமை' என்ற சீர்மை நிறை சிறப்பையும் பெற்றிருந்தது. தொல்காப்பியமும் சங்க நூல்களும் யாழ் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. தொல்காப்பியர் கருப்பொருள் பற்றிக் குறிப்பிடும் போது யாழ் பற்றியும், பறை பற்றியும் கூறுகின்றார். தொல்காப்பியர் இசையிலக்கணத்தை நரம்பின் மறை என்று குறிப்பிட்டுள்ளமை அவரது காலத்தில் நரம்பிசைக் கருவிகள் பெற்றிருந்த செல்வாக்கினை உணர்த்தி நிற்கின்றது.
'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்' (தொல்-எழுத்-நூற்பா-33)
நான்கு நிலத்துக்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்துக்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழைக் குறிப்பிடுகின்றார். நான்கு பெரும் பண்களுக்கும் முல்லையாழ், குறிஞ்சியாழ், நெய்தல் யாழ், மருதயாழ் என்று யாழ்களின் பெயர்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மழலைகளின் குரலினிமைக்கு எடுத்துக் காட்டுக் கூற வந்த திருவள்ளுவர் குழலோசையையும் யாழோசையையும் குறிப்பிடுவது இங்கு நோக்கத் தக்கதாகும். குறிஞ்சி நில வேடரின் வில்லில் இருந்து யாழ் தோன்றியது என்பது ஆராய்ச்சியாளர்களது முடிவாகும். இருவேறுவில் நாண்களின் ஒலி வேறுபட்டிருப்பதைக் கண்டு, ஒரே வில்லில் பல நரம்புகளை இட்டு மீட்டியபோது யாழ் பிறந்தது. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசைக்கும் ஏழு நரம்புகளைக் கட்டி அவற்றை விரலினால் மீட்டி இசையை உண்டாக்கினார்கள்.
பத்தர், கோடு, ஆணி, நரம்பு, திவ்வு, தந்திரி. கரம் என்பவை யாழின் உறுப்புக்கள் ஆகும். செங்கோட்டி யாழ், சகோடயாழ், மகரயாழ், பேரியாழ், வில்யாழ், நாரதப்பேரியாழ் என்று பல வகை யாழ் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நாரதப் பேரியாழ் ஆயிரம் நரம்புகளையுடையது ஆகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் பாடும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் இந்த யாழை வாசித்ததாக இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.
வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி' - பெரும்பாணாற்றுப்படை
மெல் யாழ் பற்றி மெல்ல வாங்கி - சங்க இலக்கியம் - புறநானூறு
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடுபாலால் கொளல் குறள் -279
யாழும் குழலுமஞ்சீருமிடறும் - சிலப்பதிகாரம்-அரங்கேற்றுகாதை-26-30
ஈரேழ் சகோடமும் இடைநிலைப் பாலையும் – சிலம்பு நாடுகாண் காதை
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது – சிலப்பதிகாரம்-அரங்-139-140
வணகோட்டுச் சீறியாழ் வாங்குபு தழிஇப் புணர்புரி நரம்பிற் சிலம்பு -நடுகற்காதை -31-32
சங்க இலக்கியங்களும் திருக்குறளும் சிலப்பதிகாரமும் கூறும் யாழ் பற்றிய குறிப்புக்களில் சில இவையாகும்.
இத்தகைய தொன்மையும் இனிமையும் சிறப்பும் நிறைந்த யாழ் என்னும் இசைக்கருவி ஈழத் தமிழர்களின் இசை வரலாற்றிலும், இலக்கிய வரலாற்றிலும் இன வரலாற்றிலும் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. 'தமிழிசைத் தொன்மை - புரிதலும், பேணலும்' என்ற நோக்கில் நாம் யாழ் என்ற இசைக் கருவியின் இன்றியமையாமையைப் புரிந்து கொள்வதுடன் அதனைப் பேண வேண்டிய கட்டாயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்
1. யாழ்ப்பாணத்துக்கும் யாழ் என்ற இசைக் கருவிக்கும் உள்ள தொடர்பு.
யாழைச் சிறப்பாக மீட்டுத் தமிழிசை பாடிய பாணனுக்குப் பரிசாகக் கொடுத்த நிலம் யாழ்ப்பாணம் என்று மரபு வழிக் கதைகள் கூறுகின்றன.
2. யாழ் நூல் பற்றிய முழுமையான ஆய்வும் தேடலும்.
விபுலானந்த அடிகளால் எழுதப்பெற்ற மிகச்சிறந்த நூல் யாழ் நூல் ஆகும்.
விபுலானந்த அடிகள் எழுதிய யாழ் நூலானது யாழ் பற்றிய அரிய செய்திகள் பலவற்றைத் தருகின்றது. இசைத் தமிழ் ஆய்வு செய்த முதன்மைச் சான்றோர்களில் இவரும் ஒருவர் என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ளும் ஒரு விடயம் ஆகும்.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமிழிசை ஆய்வு என்னும் முதல் இசை ஆய்வு நூலை எழுதியவர் ஆவார். யாழ் நூலானது பல ஆண்டுகள் இயல் பற்றியும், இசை பற்றியும் ஆராய்ந்து எழுதிய ஒரு ஆய்வு நூல் ஆகும். இந்த நூலினை முழுமையாகக் கற்றுக் கொள்வதற்கு கணித அறிவும், இலக்கிய ஆளுமையும், தமிழிசை பற்றிய தேடலும், புரிதலும் அவசியமாகும். அறிவியல் பட்டதாரியான அடிகளார் அவர்கள் தமது அறிவியல் ஆற்றலையும் பயன்படுத்தி இந் நூலினைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். 1947ஆம் ஆண்டு வெளி வந்த இந்த நூல் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாராய்ச்சியினை நான் எழுதத் துணிந்தது பொய்யில் காட்சிப் புலமையிலோராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமா காவியமாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னால் இயன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெரு விருப்பினாலேயாம்.
இயற்றமிழ் நூல்களிலே பரந்து கிடக்கும் இசைநூல் முடிவுகளை என் போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின் எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் கொண்டு உளமகிழ்வுறுவேன்.
கடல்வாய்ப் பட்டனவும் காலத்தின் மாறுதலினாலே மறைந்து போயினவுமாகிய நூல்கள் மிகப் பல. அந் நூற்பெயர்களைக் கூறிப் பழமை பாராட்டுவதோடு அமைந்திருப்போமா இல்லை முன்னிருந்த கலைச் செல்வத்தை மீட்டும் பெறுவதற்கு முயல்வோம். அத்தகைய முயற்சி நமது நாட்டுக்கு ஆக்கமளிக்கும்.
சர் உவால்டர் ஸ்கொட் என்னும் கவிஞர் தமது தாய்நாட்டில் இருந்து மறைந்துபோன யாழ்க் கருவியினை முன்னிலைப் படுத்தி எழுதிய செழும்பாடல் உள்ளத்தை உருக்கும் நீர்மையது. அது நமது நாட்டு யாழ்க் கருவிக்கும் ஏற்புடையதாதலின், அப் பாடலின் மொழிபெயர்ப்பினை ஈண்டுத் தருகின்றோம். இது ஸ்கொட் எழுதிய நீர்நிலைக் கன்னிகை (Lady of the Lake) என்னும் அழகிய பனுவலின் முன் நிற்பது.
வட புலத்து நல் யாழே நீரூற்றுனுக்கு நிழலளுக்கும் இம் மரக்கிளைமீது நெடிது தங்கினை. இலையொலியும், அருவி நீரொலியும் இசையியம்ப நின்னரம்புகள் இசையின்றித் துயிலுதல் முறையாகுமா? முன்னாளிலே வீசுகின்ற காற்றிலே இசையமுதத்தினை உகுத்தனையே. நின்பாற் பொறாமையுற்ற பசுங்கொடி படர்ந்து நின் நரம்புகளை ஒவ்வொன்றாகக் கட்டிவிட்டமையினாலே பேசாதிருக்கின்றனையோ? வீர் முகத்திலே புன்னகை தவழவும், அரிவையர் நாட்டங்களிலிருந்து உவகைக் கண்ணீர் கலுழவும் நினது இனிய குரலினாலே பேசலாகாதோ?
முன்னாளிலே, கலிடோனியாவிலே விழாக் கொண்டாடுவோர் மத்தியிலே, நீ மௌனம் சாதித்ததில்லையே. காதலையும் வெற்றியையும் பாடி அச்சத்தையும் பெருமிதத்தையும் அளவுபடுத்தினையே. நினது இசை கேட்டுருகும் வண்ணம் காவலரும் காரிகை நல்லாரும் சூழ்ந்து நின்றனரன்றோ? வீரரது தீரச் செயலும் காரிகையாரது ஒப்பற்ற கண்ணிணைகளுமே நினது பாடற் பொருளாக அமைந்தன.
நல் யாழே! துயிலெழுந்தெழுவாயாக நினது நரம்புகளிற் படரும் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியினை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கருவி ஓர் இதயமாவது துடிப்புறுமெனின் நின் செயல் வீண்செயல் ஆகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருந்தால் தகுதி அன்று. சித்தத்தைக் கவரும் வன மோகினியே! எழுந்திரு. இன்னும் ஒரு முறை எழுந்திரு.
வட புலத்து நல் யாழே என்றிருப்பது தென் புலத்து நல் யாழே எனவிருப்பின் தமிழ் நாட்டுப் பாணரிசைத்த யாழுக்கு இப் பாடல் ஏற்புடையதாகுமன்றோ?
ஆக்கம்: கலாநிதி குலமோகன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி







